சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சீரமைக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல்
மறைமலை நகர்: சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் சுங்கச்சாவடி -- ஆத்தூர் சுங்கச்சாவடி வரை சாலையின் இரண்டு மார்கங்களிலும், பரனூர், மாமண்டூர், படாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக மிகவும் சிதிலமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.எனவே இந்த பகுதியில் சாலை புதிதாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் மாமண்டூர் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. புலிப்பாக்கம், பரனூர் பகுதிகளில் பழைய சாலை பெயர்த்து எடுத்து ஒரு மாதங்களுக்கு மேலாக புதிய சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்படாமல் இருந்து வந்தது.இது குறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, சென்னை மார்க்கத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் எதிர் திசையில் திருப்பி விடப்பட்டு உள்ளது.இதனால் நேற்று ஜி.எஸ்.டி., சாலையில், பரனூர் வட்டார போக்குவரத்து சந்திப்பு, சுங்கச்சாவடி, ராஜகுளிப்பேட்டை, புலிப்பாக்கம் உள்ளிட்ட பகுதி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதன் காரணமாக அரசு பேருந்துகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை போக்குவரத்து நெரிசலில் சிக்கின.பரனூர் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் அதிக அளவில் புழுதி பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.எனவே, சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.