மாமல்லையில் குடிநீர் பற்றாக்குறை புதிய குடிநீர் தொட்டி அமைப்பு
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் நீடிக்கும் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண, கைவிடப்பட்ட பழைய நீர்த்தேக்க தொட்டியை அகற்றி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது.மாமல்லபுரத்தில் மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, பவழக்காரன்சத்திரம், தேவனேரி ஆகிய பகுதிகளுடன், 15 வார்டுகள் உள்ளன.இப்பகுதிகளில் கிணறுகளிலிருந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றி, தெருக்குழாய் வாயிலாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.மேலும், பிரதான இடங்களில் சுத்திகரிப்பு குடிநீர் மையம் வாயிலாகவும், பொதுமக்கள் குடிநீர் பெறுகின்றனர்.மக்கள் தொகை பெருக்கம், வசிப்பிட பகுதிகள் விரிவாக்கம் காரணமாக, குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தினமும் இரண்டு மணி நேரம் குடிநீர் வழங்கி வந்த நிலையில், பற்றாக்குறை காரணமாக அடிக்கடி ஒரு மணி நேரமாக குறைக்கப்படுவதால், பொதுமக்கள் ஏமாற்றமடைகின்றனர்.இதை தவிர்க்க, குடிநீர் விநியோக மேம்பாட்டிற்கு முடிவெடுத்த பேரூராட்சி நிர்வாகம், ஒற்றைவாடைத் தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகள் குடிநீர் விநியோகத்திற்காக, காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி., செல்வம் வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதி 23.50 லட்சம் ரூபாயில், கிழக்கு ராஜ வீதி, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டுகிறது.நீண்ட காலத்திற்கு முன் பயன்பாட்டில் இருந்து, நாளடைவில் பலமிழந்து கைவிடப்பட்ட குடிநீர் தொட்டியை இடித்து, புதிய தொட்டி கட்டப்படுகிறது. ஓராண்டிற்கு முன் பூமி பூஜை நடத்தியும், தற்போது தான் பணிகள் நடைபெறுகின்றன. வருவாய் ஆய்வாளர் அலுவலக பாழடைந்த கட்டடம் அங்குள்ள நிலையில், கட்டட பகுதிக்கு இடையூறாக தொட்டி விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாக, வருவாய்த் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.