மணப்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் 10 சவரன், ரூ.4 லட்சம் கொள்ளை
சூணாம்பேடு:மணப்பாக்கத்தில், வீடு பூட்டை உடைத்து, 10 சவரன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோபால்சாமி என்பவரது மகன் பிரதாப், 25.இவர் தன் தாய் சிவகங்கை என்பவருடன், சென்னையில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.மணப்பாக்கத்தில் உள்ள சொந்த வீட்டிற்கு, வாரம் ஒருமுறை வந்து செல்வது வழக்கம்.வரும் ஜூன் 5ம் தேதி பிரதாப்பிற்கு திருமணம் நடக்க உள்ளதால், கடந்த 16ம் தேதி வீட்டிற்கு வந்து பராமரிப்பு பணிகள் செய்துவிட்டு சென்னை சென்றனர்.இந்நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில், வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதாக, அக்கம் பக்கத்தினர் மொபைல் போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.பின் பிரதாப் சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, திருமணத்திற்காக வீட்டின் பிரோவில் வைக்கப்பட்டு இருந்த 4 லட்சம் ரூபாய், 10 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.இதுகுறித்து பிரதாப், சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.