உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திரிசூலத்தில் அனுமதியின்றி இயங்கிய 12 கிரஷர்களுக்கு...சீல்! :அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

திரிசூலத்தில் அனுமதியின்றி இயங்கிய 12 கிரஷர்களுக்கு...சீல்! :அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

செங்கல்பட்டு:சென்னை, பல்லாவரம் தாலுகா, திரிசூலம் கிராமத்தில் உள்ள திரிசூலநாதர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோர், கல் அரவை எனும் கிரஷர் நடத்தி வருகின்றனர்.இதையொட்டியுள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்ட கிரஷர்கள் உரிய அனுமதியின்றி இயங்கி வருவதாக, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு, புகார்கள் வந்தன.தொடர்ந்து, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் தெய்வஅருள், பல்லாவரம் தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர், திரிசூலத்தில் மார்ச் 27ம் தேதி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், 12 கிரஷர்கள் உரிய அனுமதியின்றி இயங்கி வந்தது தெரிந்தது.இதையடுத்து, கனிமவள சட்ட விதியின் கீழ் பதிவு செய்யப்படாத காரணத்தால், 12 கிரஷர்களுக்கும், அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எம் - சாண்ட், ஜல்லி போன்றவற்றை உற்பத்தி செய்வதோ, அவற்றை வெளியில் எடுத்துச்சென்று விற்கவோ கூடாது எனவும், கிரஷர் ஆலை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இதுசம்பந்தமாக 'நோட்டீஸ்'சும் ஒட்டியுள்ளனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:திரிசூலம் கல் குவாரிகளில் இருந்து, 16 டன் உடைய ஒரு லாரியில், 30 டன் வரை கல் ஏற்றிச் செல்லப்படுகிறது. தினம் 50 லோடு செல்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிகளவு லோடு லாரியில் எடுத்துச் செல்லப்படுகிறது.கல் குவாரி, கிரஷர் ஆலை செயல்பாட்டை, மாதத்திற்கு ஒருமுறை கண்காணிக்க வேண்டிய கனிமவளத் துறை, லட்சக்கணக்கில் கமிஷன் பெற்று, ஆய்வு நடத்துவதில்லை. அதிகாரிகளின் இந்த முறைகேடால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.செங்கல்பட்டு மாவட்ட, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் கூறுகையில், ''மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் கல் அரவை ஆலைகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

பம்மலில் கிரஷர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றுத்துார் அருகே எருமையூரில், 30க்கும் அதிகமான கிரஷர்களும், பம்மல் காமராஜபுரத்தில் 15 கிரஷர்களும் இயங்குகின்றன. இதில், பம்மல் காமராஜபுரத்தில் உள்ள கிரஷர்களில் பல, முறையான அனுமதியின்றி, அரசு நிலத்திலேயே இயங்குகின்றன. குடியிருப்பு பகுதியில் இருந்து, ஒரு கி.மீ., துாரத்தை தாண்டி கிரஷர்கள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இங்கு, மாநில நெடுஞ்சாலையை ஒட்டியும், குடியிருப்புகளை ஒட்டியும், 10 மீட்டர் துாரத்திலேயே இயங்குகின்றன.கடந்த ஆண்டு, பல்லாவரம் வருவாய் துறையினர் ஆய்வு செய்து, அனுமதி பெறாத கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக, சில வாரங்களிலேயே அவை மீண்டும் இயங்கத் துவங்கின.மற்றொரு புறம், கிரஷர்களில் இருந்து வெளியேறும் துாசியால், அதை ஒட்டியுள்ள குடியிருப்புவாசிகள், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ