பொது வனத்துறை ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை
கேளம்பாக்கம்,கொளப்பாக்கத்தில், வனத்துறை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, 15 சவரன் தங்க நகை, 87,500 ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கேளம்பாக்கம் அடுத்த கொளப்பாக்கம், அண்ணா நகர், கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார், 32;சைதாப்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர், கடந்த மார்ச் 28ம் தேதி, வெளியூர் சென்றுள்ளார்.இந்நிலையில், கடந்த 30ம் தேதி, விஜயகுமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக, அக்கம்பக்கத்தினர் அவருக்கு, மொபைல் போனில் தகவல் கூறி உள்ளனர்.கொளப்பாக்கம் வீட்டிற்கு திரும்பிய விஜயகுமார், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகள், 87,500 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து தகவலின்படி, கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து, வீட்டு சுவர்களில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். தவிர, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.