மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் பலி
செய்யூர்:கூவத்துார் அடுத்த நெற்குணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணி, 52; விவசாயி. மேலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சொந்தமான மாடுகள் நேற்று மதியம் 12:00 மணியளவில், கூவத்துார் பகுதியில் மேய்ந்துள்ளன. அப்போது, கனகம்மாள் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், மோட்டாருக்கு மின்சாரம் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டு இருந்த உயரழுத்த மின்கம்பிகள், அறுந்து கிடந்துள்ளன. மேய்சலுக்கு சென்ற ஒரு பசு மற்றும் ஒரு எருமையின் மீது இந்த மின்கம்பிகள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து, இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அங்கிருந்தோர் இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து, மின்சாரம் நிறுத்தப்பட்டு, மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டன. உயிரிழந்த மாடுகள், அரசு கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இது குறித்து கூவத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.