உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஒரே நாளில் 3 மின் மோட்டார்கள் பழுது குறைந்த மின் அழுத்தத்தால் வேதனை

ஒரே நாளில் 3 மின் மோட்டார்கள் பழுது குறைந்த மின் அழுத்தத்தால் வேதனை

திருப்போரூர்'செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் ஊராட்சியில் அடங்கியது மருதேரி கிராமம். இப்பகுதிக்கு சிங்கப்பெருமாள் கோவில் பகுதியிலிருந்து, மின் வினியோகம் செய்யப்படுகிறது. இக்கிராமத்தில் மூன்று மின்மாற்றிகள் உள்ளன. இதில் ஒரு மின்மாற்றி இணைப்பின் வாயிலாக, 200 ஏக்கர் பரப்பு விவசாயம் செய்யப்படுகிறது.இங்கு கடந்த ஒரு வாரமாக, இப்பகுதியில் குறைந்த, உயர் மின் அழுத்த பிரச்னை இருந்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட குறைந்த, உயர் மின் அழுத்த பிரச்னையால், மூன்று விவசாய கிணற்றின் மின்மோட்டார்கள் பழுதடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகின்றனர்.இதை கேள்விப்பட்ட மற்ற விவசாயிகளும், தங்கள் மின்மோட்டாரும் பழுதடைந்து விடுமோ என்ற பயத்தில், மின்மோட்டார்களை இயக்காமல் உள்ளனர். இதனால், அங்குள்ள அனைத்து விவசாய நிலத்திற்கும் தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உருவாகியுள்ளது.மின்மோட்டார் பழுதடைந்தால், அதை சரிசெய்ய 8,000 ரூபாய் வரை செலவாகிறது. மீண்டும் பழுதடைந்தால், அதே தொகை தர வேண்டும். இவ்வாறு, பழுதடைந்ததை மீண்டும், மீண்டும் சரி செய்தால், மோட்டாரின் செயல் திறன் குறைந்து விடுகிறது.இதுஒருபுறம் இருக்க, மின்மோட்டார் பழுது ஏற்பட்டால் விவசாயிகள் அதை தாங்களே கழற்றி, பழுது நீக்கும் கடைக்கு எடுத்துச் சென்று சரி செய்து, மீண்டும் அவர்களே கொண்டு வந்து பொருத்த வேண்டியுள்ளதால், பயிர்கள் காய்ந்து பாதிப்பு ஏற்படுகிறது.இவ்வாறு, விவசாயிகள் பல்வேறு வகையில் சிரமத்தை சந்திக்கின்றனர்.மின்மாற்றியை முறையாக பராமரிக்காததால், குறைந்த மின் அழுத்த பிரச்னை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.எனவே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளின் வேதனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ