ஆப்பூரில் பூட்டு உடைக்கப்பட்டு 35 சவரன் நகை கொள்ளை
சிங்கபெருமாள் கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வன், 37. இவர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி ஒரகடம் பகுதியில் 'ஏசி' மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் உள்பக்கம் பூட்டி விட்டு படுக்கை அறையில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டு இருந்தார்.நள்ளிரவில் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் படுக்கையறையில் இருந்த பீரோவின் பூட்டை உடைத்து அதில் இருந்த 1.5 லட்ச ரூபாய், 35 சவரன் நகைகள், வெள்ளி கொலுசு உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர்.நேற்று காலை செல்வம் எழுந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு சென்ற பாலுார் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டும் யாரும் துாக்கத்தில் இருந்து எழவில்லை.எனவே திருடிய மர்ம நபர்கள் அறைக்குள் மயக்க மருந்து தெளித்து கொள்ளையடித்து சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.