9 நகர் நல்வாழ்வு மையங்கள் தாம்பரம் மாநகராட்சியில் திறப்பு
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், ஒன்பது நகர் நல்வாழ்வு மையங்கள், பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன. இவை, காலை 8 - 12 மணி வரையிலும், மாலை 4 - 8 மணி வரையிலும் செயல்படும்.தாம்பரம் மாநகராட்சியில், 70 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், மக்களின் வசதிக்காக, பம்மல் பஜனை கோவில் தெரு, ஈஸ்வரி நகர், ஐஸ்வர்யா நகர், ராமகிருஷ்ணாபுரம், பஜனை கோவில் தெரு, புதுபெருங்களத்துார், பழையபெருங்களத்துார், மாடம்பாக்கம், பெரியார் நகர் உள்ளிட்ட ௯ இடங்களில், நகர் நல்வாழ்வு மையங்கள் கட்டப்பட்டன. அவை, நேற்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.இந்த நகர் நல்வாழ்வு மையங்கள், காலை 8 - 12 மணி வரையிலும், மாலை 4 - 8 மணி வரையிலும் இயங்கும். ஒவ்வொன்றிலும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு பணியாளர் பணியில் இருப்பர்.தாம்பரம் மாநகராட்சியில், ஏற்கனவே ஒன்பது நகர் நல்வாழ்வு மையங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது, புதிதாக திறக்கப்பட்ட மையங்களுடன் சேர்த்து, 18 நகர் நல்வாழ்வு மையங்கள் பயன்பாட்டில் உள்ளன.