மண் சாலையா... நெடுஞ்சாலையா? வாகன ஓட்டிகள் திக்... திக் பயணம்!
பவுஞ்சூர்:மாமல்லபுரம்- புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி, இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக, மாமல்லபுரம் - மரக்காணம் இடையே திட்டத்தை செயல்படுத்துகிறது. இச்சாலை விரிவாக்க திட்ட பணிகளுக்காக, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.சாலை தாழ்வாக உள்ள பகுதிகள், பாலங்கள் அமையும் இடங்களில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகளில் அரசு அனுமதியுடன் மண் எடுத்து வரப்பட்டு, சாலை உயர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது.மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், பவுஞ்சூர் அடுத்த கடுகுப்பட்டு ஏரியில் இருந்து மண் எடுக்கும் பணி, கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.ஏரியில் இருந்து மண் எடுத்துச் செல்லும் லாரிகள் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு, தார்ப்பாய் மூடாமல் செல்வதால், லாரியில் இருந்து சிதறும் ஏரி மண் சாலையில் குவிந்து காணப்படுகிறது.ஏரி மண் களிமண் தன்மை உடையதால், சாலையில் ஒட்டிக்கொண்டு மழை பெய்தால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மண்ணில் வழுக்கி விபத்தில் சிக்கி வருகின்றனர்.வெயில் நேரத்தில் சாலையில் தேங்கியுள்ள மண் புழுதியாக பறக்கிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சாலையில் குவிந்துள்ள களிமண் குவியல்களை அகற்றி, மண் ஏற்றிச் செல்லும் லாரிகளில் தார்ப்பாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.