ஆறு மாதங்களாக துாங்கும் மீன் விற்பனை வாகனம்
சென்னை: மீன்வளத்துறை அலுவலகத்தில், நடமாடும் நவீன மீன் விற்பனை வாகனம், ஆறு மாதங்களுக்கு மேலாக பயன்பாடின்றி முடங்கிக் கிடக்கிறது. பொது மக்கள் எளிதாக, தங்கள் வீடுகளுக்கு அருகில் மீன் வாங்கும் வகையில், தமிழ்நாடு மீன்வள கூட்டுறவு இணையம் சார்பில், நவீன மீன் விற்பனை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. கடல் மீன்கள் விற்க வசதியாக, குளிர்சாதனப் பெட்டி வசதியுடன் பல பகுதிகளிலும் இந்த நடமாடும் வா கனம் சுற்றி வந்தது. இந்நிலையில், நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை தலைமை அலுவலக வளாகத்தில், நடமாடும் மீன் விற்பனை வாகனம், ஆறு மாதத்திற்கு மேலாக, பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மீன்வள கூட்டுறவு இணைய அதிகாரிகள் கூறுகையில், 'மீன் விற்பனை வாகனம் பழுதானதால், மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இம்மாத இறுதிக்குள் வாகனம் பழுது சரி பார்க்கப்படும். மீன்வளத்துறை அலுவலக வளாகத்திலேயே, தேவையான மீன்களை பொதுமக்கள் வாங்கிச் செல்லும் வகையில், நடமாடும் வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்' என்றனர்.