உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலைநகர் ஜி.எஸ்.டி., சாலையில் சிக்னல் இல்லாததால் தொடர் விபத்து

மறைமலைநகர் ஜி.எஸ்.டி., சாலையில் சிக்னல் இல்லாததால் தொடர் விபத்து

மறைமலைநகர்:மறைமலைநகர் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதனால், இங்கு 'சிக்னல்' அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மறைமலைநகரில் சாமியார் கேட் சந்திப்பு உள்ளது.இந்த சந்திப்பு வழியாக மறைமலைநகர் 'சிப்காட்' தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பொருட்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இதுமட்டுமின்றி, இருசக்கர வாகன ஓட்டிகளும் சென்று வருகின்றனர்.மேலும் சுற்றியுள்ள பேரமனுார், சட்ட மங்கலம், திருக்கச்சூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அடிப்படை தேவைகளுக்கு மறைமலைநகருக்கு வந்து செல்கின்றனர்.இந்த பகுதியில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பங்கள், மூன்று ஆண்டுகளுக்கு முன், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளின் போது அகற்றப்பட்டன.இந்த பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படாமல் உள்ளது.இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.குறிப்பாக பள்ளி குழந்தைகள், முதியவர்கள் பெண்கள் உள்ளிட்டோருக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த சாலையை கடப்பது பெரும் சவாலாக உள்ளது.தாறுமாறாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி மருத்துவ செலவு, சேதமடைந்த வாகனங்களை பழுது நீக்கும் செலவு என, வாகன ஓட்டிகள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற விபத்துகளில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பலர் உடல் உறுப்புகளை இழந்தும் உள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை