மின் கம்பம் ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து
மேல்மருவத்துார்:அச்சிறுபாக்கம் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ், அச்சிறுபாக்கத்தில் இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது.இக்கோட்டத்தின் கீழ், நுகும்பல், அச்சிறுபாக்கம் நகரம் மற்றும் ஊரகம், ஒரத்தி 1, 2, எலப்பாக்கம், தொழுப்பேடு, மேல்மருவத்துார், சித்தாமூர், சூணாம்பேடு உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன.இப்பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், வீட்டு மின் இணைப்பு மற்றும் விவசாயம், வணிகப் பயன்பாடு உள்ளிட்ட தேவைகளுக்காக, 90,000 மின் இணைப்புகள் உள்ளன.புதிதாக மின் இணைப்பு பெறும் நபர்கள் மற்றும் துணை மின் நிலையங்களுக்கு தேவைப்படும் பொருட்கள், அச்சிறுபாக்கம் துணை பண்டக சாலையில் இருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன.அவ்வாறு, நேற்று செய்யூர் அடுத்த வேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடபதி, 26, என்பவர், அச்சிறுபாக்கம் துணை பண்டக சாலையில் இருந்து, பொலம்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு, ஆறு மின் கம்பங்களை டிராக்டரில் ஏற்றி சென்றுள்ளார்.அச்சிறுபாக்கத்தில் இருந்து சோத்துப்பாக்கம் வழியாக, வந்தவாசி -- செய்யூர் மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பொறையூர் பேருந்து நிறுத்தம் அருகே, டிராக்டர் டிப்பரிலிருந்த மின் கம்பங்கள் ஒரு புறமாக சாய்ந்தன.அதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பி மீது ஏறி நின்றது. இதில், அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.