உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளிக்கு உதவுவதாக பணம் பெற்றால் நடவடிக்கை

மாற்றுத்திறனாளிக்கு உதவுவதாக பணம் பெற்றால் நடவடிக்கை

செங்கல்பட்டு:'மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதாகக் கூறி பணம் பெற்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம், அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்கிறேன் அல்லது பெற்றுத் தருகிறேன் எனக் கூறி தனி நபர் மூலமாகவும், நிறுவனங்கள் மூலமாகவும் பணம், வேறு வகையில் ஆதாயம் பெறும் நோக்கில் ஈடுபட்டால், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ன்படி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கோள்ளப்படும்.மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பு கல்வி, இயன்முறை பயிற்சி அளித்தல், மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை, அரசு சாரா நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ன்படி, பதிவுச்சான்று மற்றும் அங்கீகாரம் பெற்று செய்து வருகின்றன.இதுநாள் வரை, மேற்காணும் சட்டத்தின்படி பதிவுச்சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் அரசு சாரா நிறுவனங்கள், இரண்டு மாத காலத்திற்குள் அங்கீகாரம் பெற வேண்டும்.இல்லை என்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான கருத்துருவை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில், நேரில் சமர்ப்பித்து, அரசு அங்கீகாரம் மற்றும் பதிவுச்சான்றுடன் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !