மழையில் நெற்பயிரை பாதுகாக்க விவசாயிகளுக்கு அறிவுரை
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், நடப்பாண்டிற்கு சம்பா பருவத்திற்கு 37,500 ஏக்கரில் நெல் பயிர் சாகுபடி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, 9,000 ஏக்கர் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.விவசாய நிலங்களில், நடவு பணிகள் துவங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, வெவ்வேறு நிலைகளில் உள்ள சம்பா பருவ நெற்பயிர்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்காக வேண்டும்.மழைநீர் சூழந்துள்ள வயல்களில் பயிர் இழப்பை தடுக்க, உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி, நீரினை வடித்து வேர் பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க செய்ய வேண்டும்.பயிர் முதிர்ச்சி அடைந்த நிலையில் தானியங்கள் முளைப்பதையும், நிறமற்றத்தையும் தவிர்க்க, வயிலில் தேங்கியுள்ள நீரை முழுமையாக வடிக்க வேண்டும். இவ்வாறு வடிகட்டப்படும் அதிகபடியான நீரை வீணாக்காமல், அவற்றை பண்ணை குட்டைகள், தாழ்வான பகுதிகளில் சேமித்துவைத்து தேவையான நேரத்தில் மீண்டும் பயன்படுத்தலாம்.உற்பத்தி இழப்பை தவிர்க்க, முதிர்ச்சி அடைந்த தானியங்களை அறுவடை செய்யலாம். அறுவடைக்குபின் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க, தார்ப்பாய்களை பயன்படுத்த வேண்டும்.அதிக மழையினால் மண்ணிலிருந்து அடித்துச்செல்லப்படும் நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் சத்துக்களை ஈடுசெய்ய, பரிந்துரைக்கப்பட்டதை விட 25 சதவீதம் கூடுதல் அளவு யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை மேல் உரமாக இட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் யூரியா, நுண்ணுட்ட சத்துக்களை இலை வழியாக தெளிக்க வேண்டும். பருவ மழையால் பாதிக்கப்பட்ட இளம் பயிர்களை பாதுகாக்க, மழைநின்றவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, 1 கிலோ ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை, 200 லிட்டர் நீரில் கலந்து, ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து கைதெளிப்பான் மூலம் பயிரின் இலைகளில் படும்படியாக தெளிக்கவேண்டும்.பூக்கும் தருவாயில் உள்ள பயிர்களுக்கு, வயலில் தண்ணீர் வடிந்தவுடன் 1 ஏக்கருக்கு மேல் உரமாக 22 கிலோ யூரியா, 10 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுவதும் வைத்து, மறுநாள் 17 கிலோ பொட்டாஷ் உடன் இடுவதன் மூலம், ஊட்டச்சத்து குறைப்பாட்டை தவிர்க்கலாம்.பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் போகும்போது, வேம்பு சார்ந்த மருந்துகளை உபயோகிக்க வேண்டும். வானிலை அறிக்கை தொடர்பான தகவல்களுக்கு, உழவன் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.இயற்கை, சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீள, சம்பா பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்யவும், வரும் நவ., 15 க்குள் காப்பீடு செய்ய வேண்டும். விவசாயிகள் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆலோசனைபெற, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செல்வபாண்டியன் இதை தெரிவித்துள்ளார்.