கழிவுநீர் விட்ட சிட்கோ தொழிற்சாலை கண்டித்து ஆலத்துார்வாசிகள் முற்றுகை
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், பழைய மாமல்லபுரம் சாலையில், ஆலத்துார் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு 5,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.இந்த ஊராட்சியைச் சுற்றி வெங்கலேரி, தண்டலம், பண்டிதமேடு, சிறுதாவூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு கடந்த 1982ம் ஆண்டு, சிட்கோ தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது.சிட்கோ வளாகத்தில், 30க்கும் மேற்பட்ட தனியார் மருந்து தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில் 20,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.இங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் துார்ந்து உள்ளன.இதனால், தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனம் கலந்த கழிவுநீர் வெளியேறி, ஆங்காங்கே சாலையோரம் தேங்குகிறது. அதேபோல், தொழிற்சாலைகளிலிருந்து புகை குழாய் வாயிலாக, ரசாயன நச்சுப் புகை வெளியேறுகிறது.இந்த கழிவுநீர் மற்றும் ரசாயன புகையால் ஆலத்துார் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பாதிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதேபோல், சிட்கோ வளாகத்தில் தெரு விளக்குகளும் சரிவர எரியாததால், இரவுப் பணி முடித்துவிட்டு வீடு திரும்புவோர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.குறிப்பாக சிட்கோ வளாகத்தில், ஒரு தனியார் தொழிற்சாலை மதில் சுவரை ஒட்டி, 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இந்த தனியார் தொழிற்சாலை கழிவுநீரை சுத்திகரிக்காமல் கால்வாயில் விடுவதாலும், 100 அடிக்கு மேல் உள்ள புகை குழாயில் வெளியேற்றப்படும் ரசாயன புகையாலும், வீடுகளில் வசிப்போருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.அத்துடன், தொழிற்சாலை இயங்கும் சத்தத்தால், இரவில் துாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, பகுதிவாசிகள் இந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டு, இதுகுறித்து முறையிட்டனர்.அதற்கு தொழிற்ச்சாலை நிர்வாகம், தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் நேற்று காலை, முதற்கட்டமாக கால்வாயில் நச்சு கழிவுநீர் வெளியேறுவதை, 'பொக்லைன்' வாயிலாக மண்ணை நிரப்பி தடுத்துள்ளது.இதுபோன்று, மற்ற தொழிற்சாலைகளும் கழிவுநீர், நச்சுப் புகை வெளியேற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.