ரேஷன் பொருட்கள் சரியாக வழங்க கோரி அனைத்து பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், நியாய விலைக்கடைகளில் தற்பொழுது 'புளூடூத்' மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே வழங்க முடிகிறது.இதனால், பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. இதனால், புளூடூத் மூலம் விற்பனை செய்வதை நீக்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யும் போது, எடை குறைவாக வழங்கப்படுகிறது. அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.விற்பனையாளர்கள் மாவட்ட தேர்வாணைக் குழு மூலம் நியமனம் செய்யப்படும் பொழுது, பணிமூப்பு வரிசை உறுதிப்படுத்தப்படுகிறது. மாவட்ட தேர்வாணைக்குழு மூலம் நியமிக்கப்பட்ட விற்பனையாளர்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து, 70 கி.மீ., தொலைவில் பணியமர்த்தப்பட்டு, குறைவான சம்பளத்துடன் பணியாற்றி வருகின்றனர்.இவர்களை, சொந்த ஊருக்கு அருகில் உள்ள சங்கங்களுக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு, கோரிக்கைகள் வைக்கப்பட்டன.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகில், மாவட்ட தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நேற்று, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் கோதண்டராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.