சிங்கபெருமாள்கோவிலில் அணுகுசாலை அவசியம்
மறைமலைநகர்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலை, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால், வாகன போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது. இச்சாலை கடந்த நான்கு ஆண்டுகளாக இரும்புலியூர் -- வண்டலுார் வரை 2.30 கி.மீ., துாரம், 20.77 கோடி ரூபாயிலும், வண்டலுார் -- கூடுவாஞ்சேரி வரை 5.30 கி.மீ., துாரம் வரை 44.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கூடுவாஞ்சேரி -செட்டிபுண்ணியம் - மகேந்திரா சிட்டி வரை 13.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் என, மொத்தம் 209.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டது.சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, இந்த பகுதிகளில் இருபுறமும் இருந்த அணுகு சாலைகள் அகற்றப்பட்டு, புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டன.ஆனாலும், இதுவரை சிங்கபெருமாள்கோவிலில் அணுகு சாலை அமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் தொடர்ந்து எதிர் திசையில் சென்று வருகின்றனர். இதன் காரணமாக, பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். எனவே, சிங்கபெருமாள்கோவிலில் அணுகுசாலை அமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: ஜி.எஸ்.டி., சாலையில் சிங்கபெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்டவை கடைகள் அதிக உள்ள பகுதிகள்.போக்குவரத்து நிறைந்த இந்த பகுதிகளில் அணுகு சாலை முறையாக இல்லாததால் பள்ளி வாகனங்கள், தனியார் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர முடியாத சூழல் உள்ளது.சிங்கபெருமாள்கோவிலில் அதிக அளவில் எதிர் திசையில் வாகனங்கள் சென்று வருவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன.எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த பகுதியில் தனியாக அணுகுசாலை சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.