அடையாளம் தெரியாத வாகனம் மோதி வண்டலுாரில் மான் உயிரிழப்பு
வண்டலுார்,:வண்டலுார், காப்புக் காட்டிலிருந்து ஊருக்குள் புகுந்த மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.வண்டலுார் அருகே காப்புக்காட்டில், 1,000க்கும் மேற்பட்ட மான்கள் வசிக்கின்றன. நேற்று முன்தினம் இரவு, காட்டுப் பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஒரு மான், ஊரப்பாக்கம் மதுரை மீனாட்சிபுரம் சாலையில் சென்றது.அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அந்த மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.இச்சம்பவம் பற்றிய தகவல், நேற்று காலை 'வாட்ஸாப்' வாயிலாக பரவியது.இதையடுத்து, தாம்பரம் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடம் சென்று, நேற்று காலை 9:00 மணியளவில், உயிரிழந்த மானின் உடலை மீட்டு, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு எடுத்துச் சென்றனர்.பின், உயிரியல் பூங்கா வனவிலங்கு மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மானின் உடல், காப்புக் காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.இதுகுறித்து, வனத்துறை ஊழியர் கூறியதாவது:கடந்த 20 ஆண்டிற்கு முன், இந்திய விமானப்படை சார்பில், 20 மான்கள் இந்த காப்புக் காட்டில் விடப்பட்டன. அவை பெருகி, தற்போது 1,000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன.பரந்த காடுகளில் புலி, சிங்கம், சிறுத்தை, ஓநாய், செந்நாய் உள்ளிட்ட விலங்குகள் மான்களை வேட்டையாடி உண்ணும். இதனால், மானின் இனப்பெருக்கம் கட்டுக்குள்ளேயே இருக்கும்.ஆனால், வண்டலுார் காப்புக் காட்டில் அதுபோன்ற மாமிச உண்ணிகள் இல்லை. இதனால், மானின் இனப் பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.எனவே, மான்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, அவ்வப்போது 100 மான்களை அடர்ந்த காட்டுக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.