மேலும் செய்திகள்
மஹாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்
03-Oct-2024
மறைமலை நகர்:ஹிந்துக்களின் முன்னோர் ஆத்மா சாந்தியடைய ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில், புனித நீராடி திதி கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம்.மஹாளய அமாவாசையன்று, நம் முன்னோர்கள் இப்பூவுலகிற்கு வந்து, அவரவர் சந்ததியினரை ஆசீர்வதிப்பதாக ஐதீகம்.நேற்று மகாளய அமாவாசை என்பதால், சிங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம் சாலை அருகில் உள்ள சுத்த புஷ்கரணி குளத்தில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.இதில், சிங்கபெருமாள் கோவில், பாரேரி, ஆப்பூர், திருக்கச்சூர், தெள்ளிமேடு, கொளத்துார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.நந்திவரம் நந்தீஸ்வரர் கோவில், ஊரப்பாக்கம் ஊரணீஸ்வரர் கோவில், பெருமாட்டுநல்லுார் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தோர் தர்ப்பணம் வழங்கினர்.செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை, குளக்கரை மற்றும் கோவில்களில், ஏராளமானோர் நீராடி திதி கொடுத்து, தர்ப்பணம் செய்து தங்களது முன்னோர்களை வழிபட்டனர்.மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் புண்டரீக புஷ்கரணி குளம், கடற்கரை ஆகிய இடங்களில், மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், மூதாதையரை வழிபட்டனர்.அவர்களுக்கு எள், வாழைப்பழம், தேங்காய், மலர் ஆகியவை படைத்து, முன்னோர் பெயர்கள், குலம் குறித்து உச்சரித்து, பட்டாச்சாரியார் மந்திரம் முழங்கி வழிபட்டனர். பசுவிற்கு அகத்திக்கீரையை தானம் அளித்தனர். திருக்கழுக்குன்றம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட இடங்களிலும் முன்னோர் வழிபாடு நடந்தது.
03-Oct-2024