வணிக வரித்துறைஉதவி கமிஷனர் போரூர் ஏரியில் சடலமாக மீட்பு
சென்னை, ரூர், அம்பாள் நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல், 53; செங்கல்பட்டு வணிக வரித்துறையில் உதவி கமிஷனர். நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு, ராமகிருஷ்ணா நகர் பூங்காவில், நடைபயிற்சி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.காலை 7:30 மணி ஆகியும் வீடு திரும்பாததால், அவரது மனைவி கோமளா, 42, மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார்.ஆனால், அவரது போன், வீட்டிலேயே இருந்துள்ளது. நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், நடைபயிற்சி செய்யும் பூங்கா உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் செந்தில்வேல் கிடைக்கவில்லை.இதையடுத்து, இரவு 7:00 மணிக்கு எஸ்.ஆர்.எம்.சி., காவல் நிலையத்தில், மனைவி புகார் அளித்தார். புகாரில், 'கோவூர், மூன்றாம் கட்டளையில் கட்டிய வீட்டை, எட்டு மாதங்களுக்கு முன் என் கணவர் விலைக்கு வாங்கினார். வீடு வாங்குவதற்காக தனியார் வங்கியிலும், தெரிந்தவர்களிடமும் கடன் பெற்றுள்ளார்.ஆனால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக என்னிடமும், பிள்ளைகளிடமும் கூறி வந்தார். இந்நிலையில் அவர் மாயமாகி உள்ளார்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், போரூர் ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக, நேற்று காலை தகவல் வந்தது.உடலை மீட்டபோது, மாயமான வணிகவரித்துறை உதவி கமிஷனர் செந்தில்வேல் என்பது, போலீசாருக்கு தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.கடன் அல்லது பணியிட பிரச்னையால் தற்கொலை செய்தாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்து ஏரியில் வீசினாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.