புதுப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்துள்ள ஆட்டோக்கள்
புதுப்பட்டினம்: புதுப்பட்டினத்தில் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஆட்டோக்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம் பகுதியில், பழைய கிழக்கு கடற்கரை சாலை கடக்கிறது. சென்னை, புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்துகள், இங்கு நின்று பயணியரை இறக்கி ஏற்றிச் செல்கின்றன. கல்பாக்கம் அணுசக்தி துறையினர், புதுப்பட்டினம் மற்றும் சுற்றுபுற பகுதியினர், பேருந்திற்கு காத்திருக்கும் நிலையில், நிழற்குடை இல்லாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து, சென்னை அணுமின் நிலைய நிர்வாகம், சென்னை, புதுச்சேரி பேருந்து நிறுத்தங்களில், நவீன பயணியர் நிழற் குடைகளை அமைத்தது. கடந்த 2015ல் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்டன. மீண்டும் அமைக்க முயன்றபோது, கடையை மறைக்கும் என கூறி, வியாபாரிகள் தடுத்தனர். இந்நிலையில், புதுச்சேரி தட பேருந்து நிறுத்தமாக, அரச மரத்தடி பகுதியை தேர்வு செய்து, செய்யூர் தொகுதி மேம்பாட்டு நிதியில், இரண்டு மாதங்களுக்கு முன் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. அங்கு பேருந்தை நிறுத்த ஏற்பாடு செய்யாமல், நிழற்குடையை மறைத்து ஆட்டோக்களே நிறுத்தப்படுகின்றன. பேருந்துகள் புதிய பால சாலை சந்திப்பு பகுதியில் நிறுத்தப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.