செங்கை மாவட்டத்தில் 69 ஊராட்சிகளில் ரூ.27.29 கோடியில் அடிப்படை வசதிகள்
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 69 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அடிப்படை வசதிகள் செய்ய, 27.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊராட்சிகளில் திட்ட பணிகள் தேர்வு செய்யும் பணியில், அதிகாரிகள் சுறுசுறுப்பு காட்டி வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், திருப்போரூர் அடுத்த குன்னப்பட்டு ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை, அப்போதைய முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில், ஊராட்சிகளில் கான்கிரீட் சாலை, நுாலகம் அமைத்தல், சுடுகாடு பகுதியில் அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தற்போது, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.இதில் கான்கிரீட் சாலை, ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், சிமென்ட் கற்கள் சாலை, ஊராட்சி மன்ற அலுவலகம், மழைநீர் கால்வாய், சிறுபாலம், சமுத்துவ சுடுகாடு, சுடுகாடுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி- 2ன் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில், 2021-22ம் ஆண்டு, 70 ஊராட்சிகளில், 469 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, 35.47 கோடி ரூபாய்; 2022-23ம் ஆண்டு 74 ஊராட்சிகளில் 388 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, 28.16 கோடி ரூபாய். தொடர்ந்து, 2023-24ம் ஆண்டு, 73 ஊராட்சிகளில் 354 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, 28.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன.அத்துடன், 2024 - 25ம் ஆண்டு, 73 ஊராட்சிகளில், 322 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, 28.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 266 பணிகள் நிறைவு பெற்றன. இதில், 56 பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இப்பணிகளை விரைந்து முடிக்க, ஒப்பந்ததாரர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து, 2025-26ம் ஆண்டிற்கு, 69 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள, 27.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இதையடுத்து, ஊராட்சிகளில் செயல்படுத்த உள்ள திட்ட பணிகளை தேர்வு செய்யும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.இப்பணிகளை விரைந்து முடித்து, தேர்வு செய்யும் பணிகளை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனருக்கு அனுப்பி வைக்க, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.மாவட்டத்தில், 69 ஊராட்சிகளில் அண்ணா மறுமலச்சி திட்டத்தில் 69 பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஊராட்சிகளில் செயல்படுத்தும் பணிகள் குறித்து, வரும் 31ம் தேதிக்குள் விபரம் அனுப்பி வைக்க, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின், பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி, பணிகள் துவக்கப்பட உள்ளன.- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்,செங்கல்பட்டு.