சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய பா.ஜ., வழக்கறிஞர் கைது
செங்கல்பட்டு: பரனுார் சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கியதாக, பா.ஜ., வழக்கறிஞரை நேற்று, போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு, அண்ணா நகரைச் சேர்ந்தவர் சசிகுமார், 41; பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர். இவர், செங்கல்பட்டு நகர பா.ஜ., தலைவர் மகேஸ்வரனுடன், நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், காரில் சிங்கபெருமாள் கோவில் சென்றார். செங்கல்பட்டு, பரனுார் சுங்கச்சாவடியில், முக்கிய நபர்களுக்காக ஒதுக்கப்பட்ட 'பேரிகார்டு' அமைக்கப்பட்ட வழியில் சென்ற போது, அங்கு பணியில் இருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள், காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது சசிகுமாருக்கும், சுங்கச்சாவடி ஊழியரகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள், சசிகுமாரை தாக்கியதாகவும், சசிகுமாரும் சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்த பா.ஜ., நிர்வாகிகள், சுங்கச்சாவடி அருகே குவிந்து, பா.ஜ., வழக்கறிஞரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, பா.ஜ.,வினர் கலைந்து சென்றனர். இதுகுறித்து, சசிகுமார் அளித்த புகாரின்படி, சுங்கச்சாவடி ஊழியர் கோபாலகண்ணன், 23, உள்ளிட்ட 15 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுங்கச்சாவடி நிர்வாகம் அளித்த புகாரின்படி, சசிகுமார், மகேஸ்வரன் உள்ளிட்ட, 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சசிகுமார், மகேஸ்வரன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சசிகுமாரை கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் - 2ல் ஆஜர்படுத்தினர். அதன் பின், சசிகுமாரை வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சுங்கச்சாவடி ஊழியர் கோபாலகண்ணனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.