பத்திரிகை ஆபீஸ், நடிகை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:நக்கீரன் பத்திரிகை அலுவலகத்திற்கும், நடிகை நயன்தாரா வீட்டிற்கும் இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். மெரினா, காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், போயஸ் கார்டனில் உள்ள நடிகை நயன்தாரா வீட்டிலும், ஜாம்பஜார் ஜானி ஜான்கான் சாலையில் உள்ள நக்கீரன் பத்திரிகை அலுவலகத்திலும், வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சம்பவ இடங்களுக்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்த போலீசார், தீவிர சோதனை மேற்கொண்டனர். இரண்டு மணி நேர சோதனையில், மர்ம பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரின் இ - மெயில் ஐ.டி,யை பயன்படுத்தி, அவர் யார், எங்கு இருந்து அனுப்பி உள்ளார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.