தண்டவாளத்தில் இரும்பு துண்டு சிசிடிவியால் சிக்கிய சிறுவன்
திருவொற்றியூர்:திருவொற்றியூர் ரயில் நிலையம் - அண்ணாமலை நகர் கேட் அருகே, பிரதான ரயில்வே கேட்டிற்கும், ரயில்களை லுாப் லைனுக்கு மாற்றும் தண்டவாளம் இடையே, கான்கிரீட் கல், கருங்கற்கள், இரும்பு துண்டு ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன. லைன்மேன் இதை பார்த்து, உடனடியாக அகற்றியதால் எந்த விபரீதமும் நடக்கவில்லை.கடந்த 8ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்தனர். அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளில் பதிவுகளை ஆராய்ந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த, 10 வகுப்பு படிக்கும், 15 வயது சிறுவன், தண்டவாளத்தில் கற்கள், இரும்பு துண்டு ஆகியவற்றை வைத்தது தெரிய வந்தது.அவனை பிடித்து விசாரித்தது, செய்த தவறை சிறுவனும் ஒப்புக்கொண்டான். பிடிபட்ட சிறுவன், திருவள்ளூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். சிறுவனை எச்சரித்து, அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார். சிறுவனை தொடர்ந்து கண்காணிக்கவும், பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.