பயிர் விளைச்சல் போட்டி விவசாயிகளுக்கு அழைப்பு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குநர் பிரேம்சாந்தி வெளியிட்ட செய்திகுறிப்பு: விவசாயிகள் வேளாண்மையில் பல்வேறு தொழில்நுட்பங்களை கடைபிடித்தலை ஊக்குவிப்பதற்காக, பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட அளவில் நிலக்கடலை பயிரில் அதிக உற்பத்தியை பெறும் முதல் இரண்டு விவசாயிகளுக்கு, முதல் பரிசாக 15,000 ரூபாயும், இரண்டாவது பரிசாக 10,000 ரூபாயும் வழங்கப்படும். மாவட்ட அளவில் அதிக உற்பத்தியை பெறும் விவசாயிகள், பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற இலக்கு வழங்கப்பட்டுள்ளது. நிலக்கடலை பயிரில், மாவட்ட அளவில் நடைபெறும் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகொள்ள, குறைந்தபட்சம் 2 ஏக்கரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், 50 சென்ட் பரப்பளவில் பயிர் போட்டிக்காக அறுவடை செய்யப்பட வேண்டும். நில உடைமைதாரர்கள் மற்றும் நில குத்தகைதாரர்கள் போட்டியில் பங்குபெறத் தகுதியுடையவர்கள். வேறொரு விருதிற்காக பதிவு செய்த விவசாயிகள், பயிர் விளைச்சல் போட்டியில் பரிசு பெற்ற விவசாயிகள் அடுத்த மூன்று நிதியாண்டுகளுக்கு, இதே போட்டியில் பங்கேற்கக் கூடாது. மாவட்ட அளவிலான பரிசுகள் அறுவடை தேதியில் பெறப்பட்ட அதிகபட்ச மகசூல் - வரையறுக்கப்பட்ட ஈரப்பத அடிப்படையில் வழங்கப்படும். பயிர் விளைச்சல் போட்டிக்கான கடைசி அறுவடை தேதி, 2026 மார்ச் 15 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விவசாயிகளும் நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் செலுத்தி, சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநரிடம் படிவத்தை பூர்த்தி செய்து, உத்தேச அறுவடை தேதிக்கு 15 நாட்கள் முன்னதாக சமர்ப்பித்து, பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.