செங்கையில் குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு அழைப்பு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்ய, விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், கோடை மழை பெய்துவரும் நிலையில், வரும் குறுவை மற்றும் சொர்ணவாரி பருவத்திற்கு விவசாயிகள் ஆயத்தமாக உள்ளனர்.கடந்த ஆண்டு, 32,000 ஏக்கரில் குறுவை, சொர்ணவாரி பட்டத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு கோடை மழை பெய்துவரும் நிலையில், கோடை உழவு மேற்கொள்வதன் வாயிலாக, வயல்வெளிகளில் உள்ள பூச்சிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், 2025-26ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், நடப்பு ஆண்டில் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கும், குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், 5,000 ஏக்கர் பரப்பில் இயந்திர நெல் நடவு செய்வதற்கான மானியம், 4,000 ரூபாய் ஏக்கருக்கு வழங்கப்பட உள்ளது. இதுதவிர, 1.27 டன் நெல் விதைகள், உயிர் உங்கள், நுண்ணுாட்டக் கலவை மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது. குறுவை சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விபரங்களுடன், தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்.இந்த ஆண்டு, 34,000 ஏக்கரில் நெல் பயிர் சாகுபடி பரப்பு எதிர்பார்க்கப்படுகிறது. நுண்ணுாட்ட உங்கள் 33 டன்களும், உயிர் உரங்கள் 8,806 லிட்டரும், அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.