பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளத்தில் சிக்கிய சரக்கு வாகனம்
மறைமலை நகர்:மறைமலை நகரில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடாததால், சரக்கு வாகனம் பள்ளத்தில் சிக்கியது. மறைமலை நகர் நகராட்சியில், ஆறு வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. விடுபட்ட 15 வார்டுகளிலும், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பாதாள சாக்கடை அமைக்க, கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெற்று வருகின்றன.தற்போது காட்டாங்கொளத்துார், பேரமனுார், சட்டமங்கலம், ரயில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதில், ரயில் நகர் பகுதியில் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் முறையாக மண் கொட்டி மூடப்படாமல், சாலையில் செல்லும் வாகனங்கள் அதில் சிக்கி வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு பெய்த மழை காரணமாக சாலை முழுதும் சகதியாக மாறியுள்ளது. நேற்று காலையில் அந்த வழியாக வந்த 'டாடா ஏஸ்' சரக்கு வாகனம், பள்ளத்தில் சிக்கியது. அதன் பின் மற்றொரு சரக்கு வாகனத்தில் கயிறு கட்டி, பொது மக்கள் உதவியுடன் சரக்கு வாகனம் மீட்கப்பட்டது. எனவே, பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளத்தை, முறையாக மூட நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.