சதுரங்கப்பட்டினம் பார்க்கிங் ரூ.15 லட்சத்திற்கு ஏலம்
சதுரங்கப்பட்டினம்: சதுரங்கப்பட்டினம் வாகன நிறுத்துமிட குத்தகை, 15.05 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கல்பாக்கம் அணுசக்தி வளாகம், சதுரங்கப்பட்டினம், எடையூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பிரதான நுழைவாயில் அருகில், சதுரங்கப்பட்டினம் ஊராட்சிக்கு சொந்தமான திறந்தவெளி பகுதி உள்ளது. அணுசக்தி துறை ஒப்பந்த நிறுவன தொழிலாளர்களின் இருசக்கர வாகனங்கள், அப்பகுதி செல்லும் கார், கனரக வாகனங்கள் ஆகியவை, ஊராட்சி பகுதியில் நிறுத்தப்படுகின்றன. இவ்வாகனங்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் நிறுத்துமிட கட்டணத்தை, கடந்த ஆண்டு முதல் வசூலிக்கிறது. தற்போது வரும் நவம்பர் முதல், அடுத்த ஆண்டு அக்., வரை இக்கட்டணம் வசூலிக்கும் குத்தகை உரிமம் வழங்க, நேற்று பொது ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தில், 15 பேர் பங்கேற்று, அதிகபட்ச தொகையாக, 15.05 லட்சம் ரூபாய்க்கு கோரியவருக்கு ஏலம் விடப்பட்டதாக, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 7.20 லட்சம் ரூபாய் ஏல தொகையுடன், 12 சதவீத ஜி.எஸ்.டி., வரியும் சேர்த்து, 9.84 லட்சம் ரூபாய்க்கு உரிமம் அளிக்கப்பட்டது. தற்போது கூடுதல் தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஊராட்சித் தலைவர் ரேவதி, இதற்கு இரண்டு சதவீதம் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்படும் என, தெரிவித்தார்.