சதுரங்கப்பட்டினம் பார்க்கிங் இன்று பொது ஏலம்
சதுரங்கப்பட்டினம்: சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் இன்று, வாகன நிறுத்துமிட குத்தகை பொது ஏலம் நடக்கிறது. கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அணுசக்தி தொழில் வளாகம் அமைந்துள்ளது. இவ்வளாக நுழைவாயில் அருகில், ஊராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி இடம் உள்ளது. அப்பகுதியில், அணுசக்தி துறை ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள், தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு பணிக்கு செல்கின்றனர். கார், கனரக வாகனங்களும் இங்கு நிறுத்தப்படுகின்றன. ஊராட்சி நிர்வாகம், அதன் வருவாய் கருதி, இங்கு கட்டண வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்த, கடந்த 2022ல் முயன்றது. பல்வேறு இடையூறுகளால் அது தடைபட்டது. பின், கடந்தாண்டு முதல், பொது ஏலத்தில் தனியார் குத்தகைக்கு அளித்து, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது, ஓராண்டு குத்தகை பொது ஏலம், இன்று காலை 10:00 மணியளவில், ஊராட்சி அலுவலகத்தில் நடத்தப்படுவதாக, ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.