செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்...அடாவடி:நோயாளிகளிடம் பணம் கேட்டு நச்சரிப்பு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்களிடம், மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.செங்கல்பட்டில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமில்லாமல் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சாலை விபத்து, பிரசவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இங்கு தினமும், புறநோயளிகள் பிரிவில் சர்க்கரை நோய், கர்ப்பிணியர் மற்றும் காய்ச்சல், தோல்நோய் உள்ளிட்ட சிகிச்சைக்கு மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக 1,700 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களுக்கு உதவியாக ஒருவர் மருத்துவமனையில் தங்குவதற்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் நோயாளிகளை பார்வை நேரங்களில் மட்டுமே, பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.மருவத்துவமனையில், தனியார் நிறுவனம் வாயிலாக துாய்மை பணி செய்ய, உள் நோயாளிகளை வீல்சேரில் அழைத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டும் இன்றி, அவரச கிச்சை பிரிவு, குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டு, எலும்பு முறிவு பிரிவு, புறநோயளிகள் பிரிவுகளில், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு வார்டு உள்ளிட்ட பகுதிகளில், உள்நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களிடம், தனியார் நிறுவன காவலாளிகள் பணம் கேட்டு நச்சரிக்கின்றனர். நோயாளிகளை வீல்சேரில் அழைத்துச்செல்ல 200 ரூபாய் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.மகேப்பேறு பிரிவில் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்கள், கர்ப்பிணியருக்கு ஆண் குழந்தை பிறந்தால் 1,500 ரூபாயும், பெண் குழந்தை பிறந்தால் 1,000 ரூபாயும் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், 90 சதவீதம் பேர், பணத்தை கொடுத்து விடுகின்றனர். 10 சதவீதம் பேர் பணம் கொடுக்க மறுப்பதால் அவர்களிடம் கண்டிப்புடன் வசூல் செய்கின்றனர்.இந்த பணத்தை வசூல் செய்யும் ஊழியர்கள், தனியார் நிறுவன மேலாளர்களிடம் வழங்குகின்றனர். இதில், மேலாளர்கள் 70 சதவீதம் வரை எடுத்துக்கொண்டு, மீதம் உள்ள தொகையை பணியாளர்களிடம் வழங்குவதாக கூறப்படுகிறது. இதில், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவாக உள்ளனர்.இந்த குற்றச்சாட்டுகளை தடுக்கும் பணியில் ஈடுபடும், நிலைய மருத்துவ அதிகாரிகளை மிரட்டுகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, துாய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள் நியமிக்கும்போது, நோயாளிகள் உறவினர்களிடம் லஞ்சம் வாங்க கூடாது என, நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும். இது போன்ற செயல்களை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து மருத்துவமனை தரப்பில், கேட்டபோது, 'மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவு, மகப்பேறு பரிவு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நோயாளிகளிடம், தனியார் நிறுவன ஊழியர்கள் லஞ்சம் வாங்குதாக எந்த புகாரும் வரவில்லை. புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.