முதல்வர் தனிப்பிரிவு புகார்கள் சம்பந்தமில்லாத துறைக்கு மாற்றம்
தாம்பரம்:முதல்வர் தனிப்பிரிவில் அளிக்கப்படும் புகார்கள், சம்பந்தமே இல்லாத வேறு துறைகளுக்கு மாற்றப்படுவதாக, புகார் அளிப்போர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் தங்களது குறைகளை முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பினால், அந்த புகார்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாற்றப்பட்டு, நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்நிலையில், சமீபகாலமாக, முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும் புகார்கள், சம்பந்தமே இல்லாத வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, வேங்கைவாசலை சேர்ந்த ஜி.தினகரன், 44, என்பவர் கூறியதாவது:சில நாட்களுக்கு முன், தாம்பரம் மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடும் வாகனங்களின் பக்கவாட்டில், சாக்கு பைகளை கட்டி தொங்கவிடுவதால் நெரிசல் ஏற்படுவதோடு, விபத்தும் ஏற்படுகிறது என, ஆன்லைன் வாயிலாக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தேன்.நான் அனுப்பிய புகார், தாம்பரம் மாநகராட்சி சம்பந்தமானது. ஆனால், பரங்கிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அந்த புகார் மாற்றப்பட்டு, அங்கிருந்து என்னை தொடர்புகொண்டு புகார் குறித்து விசாரித்தனர்.இதேபோல், வேங்கைவாசல் பிரதான சாலையில், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்பது தொடர்பாக, முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினேன். அந்த புகாருக்கு, தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து, பதில் வந்தது.அதில், பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், பரிசீலனை செய்து வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அனுப்பிய புகார் வேறு; அதிகாரிகளிடம் இருந்து வந்த பதில் வேறு.வேங்கைவாசலை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், பட்டா கேட்டு, முதல்வர் தனிப்பிரிவுக்கு கடிதம் வாயிலாக புகார் அனுப்பினார். அதற்கு, பதிலோ, நடவடிக்கையோ இல்லாததால், முதல்வர் தனிப்பிரிவுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார். அப்போது, அவரது புகார், திருப்போரூர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டனர்.பட்டா கேட்டு விண்ணப்பித்த பகுதி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தாலுகா. அப்படியிருக்கையில், திருப்போரூர் தாலுகாவிற்கு ஏன் மாற்றப்பட்டது. விண்ணப்பங்களுக்கு பதில் தர வேண்டும் என்பதற்காக, சம்பந்தமே இல்லாத வேறு துறைகளுக்கு அனுப்பி, மக்களை ஏமாற்றுகின்றனர்.இவ்விஷயத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும் புகார்களை, முறையாக ஆய்வு செய்து, சரியான துறைக்கு அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.