உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இ.சி.ஆர்., சாலையில் உலாவரும் மாடுகள் கண்டுகொள்ளாத பேரூராட்சி அதிகாரிகள்

இ.சி.ஆர்., சாலையில் உலாவரும் மாடுகள் கண்டுகொள்ளாத பேரூராட்சி அதிகாரிகள்

கடப்பாக்கம், இடைக்கழிநாடு பேரூராட்சியில், சாலையில் உலா வரும் மாடுகளால், வாகன ஓட்டிகள் பீதியில் பயணிக்கின்றனர்.இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர், விளம்பூர், கெங்கதேவன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், சில உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை முறையாக பராமரிக்காததால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான விழுப்புரம், கடலுார், சிதம்பரம், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதான சாலையான, இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிகின்றன.சாலையில் தினமும் இருசக்கர வாகனம், கார், பேருந்து என, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், சாலை நடுவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கால்நடைகள் உலா வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.சில நேரங்களில், கால்நடைகள் மீது வாகனம் மோதி விபத்தும் ஏற்பட்டு வருகிறது.இதனால், இச்சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.சாலைகளில் பராமரிப்பின்றி சுற்றித் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் உலா வரும் மாடுகளை கட்டுப்படுத்தி, அதன் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி