உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மணல் திருட்டு தடுக்க துரித நடவடிக்கை கனிமவள துறைக்கு கலெக்டர் உத்தரவு

மணல் திருட்டு தடுக்க துரித நடவடிக்கை கனிமவள துறைக்கு கலெக்டர் உத்தரவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட வன அலுவலர் ரவிமீனா, வேளாண்மை இணை இயக்குனர் செல்லபாண்டி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று பேசியதாவது:கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையின்போது, கோமாரி நோய், சப்பை நோயால் கால்நடைகள் இறந்தன. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால், கால்நடைகளுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும்.வண்டலுார் ஏரிக்கு மலையில் இருந்து வரும் கால்வாய், தேசிய நெடுஞ்சாலையை கடந்து வருகிறது. கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது. அதனால், அப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.அதேபோல், பாசன கால்வாய்களையும், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.எண்டத்துார் கிராமத்தில், துணை மின் நிலையம் அமைக்க நிலம் ஒதுக்கியும், துணை மின் நிலையம் அமைக்காமல், ஐந்தாண்டுகளாக இழுத்தடித்து வருகின்றனர்.திருப்போரூர் அடுத்த ராயல்பட்டு கிராமத்தில், மின்மாற்றி அடிக்கடி தீப்பற்றி எரிகிறது. இதனால், விவசாயம் மற்றும் குடிநீர் வழங்குவது தடைபடுகிறது. புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என, மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தோம். மின்மாற்றி அமைக்க, மக்கள் பணம் கட்ட வேண்டும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பெருக்கரணை ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான இடத்தில், பல ஆண்டுகளாக இருந்த 15 புளியமரங்களை, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல், ஊராட்சி தலைவர் விற்பனை செய்துள்ளார்.அனுமதியின்றி மரம் வெட்டிய, ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுராந்தகம் ஏரி பணியை விரைந்து முடிக்க வேண்டும்.நல்லாத்துார் ஊராட்சியில், கஞ்சா விற்பனை அதிகமாக நடக்கிறது. கஞ்சா போதையில், வாலிபர்கள் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். பாலாற்றில் மணல் திருட்டு நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த, கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டை தடுக்க, கனிமவளத் துறை, போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை