இருளர்களுக்கான வீடு கட்டும் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
செங்கல்பட்டு: பெரியபுத்தேரி ஊராட்சியில், இருளர்களுக்கான வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, மாவட்ட கலெக்டர் சினேகா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரியபுத்தேரி ஊராட்சியில், பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தில், இருளர் இன மக்கள் 49 பேருக்கு வீடுகள் கட்ட, கடந்த ஜூன் மாதம் பணி ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, 49 வீடுகள் கட்ட, 2.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கி மந்தமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், கலெக்டர் சினேகா மேற்கண்ட இடத்தில், நேற்று திடீர் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின், 'வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என, வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவி, செயற்பொறியாளர் தணிகாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், 'இருளர்களுக்கான 49 வீடுகள் கட்டும் பணிகள், மூன்று மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என்றார்.