உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொது அறிவை வளர்க்க வாசிப்பு அவசியம் கல்லுாரி நிகழ்ச்சியில் கலெக்டர் அறிவுரை

பொது அறிவை வளர்க்க வாசிப்பு அவசியம் கல்லுாரி நிகழ்ச்சியில் கலெக்டர் அறிவுரை

சென்னை, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, பெரும்பாக்கம் அரசு கலை கல்லுாரி இணைந்து, தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று கல்லுாரியில் நடத்தியது.நிகழ்ச்சியை துவக்கி வைத்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது: மாணவர்கள் ஆகிய நீங்கள், படிக்கும் போதே மேல்படிப்பு என்ன படிக்கலாம், எங்கெல்லாம் வேலை வாய்ப்பு இருக்கிறது என, தெரிந்து கொள்ள வேண்டும். கல்லுாரி படிப்புடன், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு வாசிப்பு மிகவும் அவசியம். ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும், அந்த லட்சியத்தை அடைய தேவையான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு இந்த கண்காட்சியில் உள்ள புத்தகங்கள் உதவும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளும், தேர்வு முறைகளும் என்ற தலைப்பில், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தணிகைவேலு பேசினார். மேலும், சுய வேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன், முப்படையில் வேலைவாய்ப்பும் தேர்வு செய்யும் முறையும், திறன் பயிற்சி மற்றும் அதன் முக்கியத்துவம், ஆளுமை திறன் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகள்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சலுகைகள், தாட்கோ அமைப்பும் அதன் சேவைகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவிகள் என்ற தலைப்புகளில், அந்தந்த துறை அதிகாரிகள் பேசினர்.பெரும்பாக்கம் அரசு கல்லுாரி முதல்வர் உமாமகேஸ்வரி, பல்வேறு துறை அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !