மதுராந்தகத்தில் கலெக்டர் ஆய்வு
மதுராந்தகம்:மதுராந்தகம் தாலுகாவில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் முடியாமல் உள்ள கட்டுமான பணிகளை, கலெக்டர் சினேகா ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் பூதுார், ஈசூர், படாளம் மற்றும் புளிப்பரக்கோவில் உள்ளிட்ட ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக, கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் முடிவடையாத கட்டுமான பணிகளை, கலெக்டர் சினேகா நேற்று ஆய்வு செய்தார். வீடுகளின் கட்டுமான பணிகள் தாமதமாவதன் காரணம் குறித்து, ஊரக வளர்ச்சி துறை மற்றும் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின், சிலாவட்டத்தில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில், கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார். இதில், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மதுராந்தகம் வட்டாட்சியர் பாலாஜி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.