உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு அலுவலகங்களாக மாறிவரும் சமுதாய நலக்கூடங்கள் கபளீகரம் ஏழை மக்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் தவிப்பு

அரசு அலுவலகங்களாக மாறிவரும் சமுதாய நலக்கூடங்கள் கபளீகரம் ஏழை மக்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் தவிப்பு

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சமுதாய நலக்கூட கட்டடங்களில் பலவற்றை காவல் நிலையம், சார்-பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட மாற்றுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதால், ஏழை மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். பல இடங்களில் சமுதாக நலக்கூடங்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், அவற்றை சீரமைக்க வேண்டுமெனவும், வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், மாமல்லபுரம், மதுராந்தகம் என ஐந்து நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகள், 359 ஊராட்சிகள் உள்ளன. இங்கு 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும், மாவட்டம் முழுதும் 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளதால், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியேறி வருகின்றனர். இவர்களில் ஏழை மக்கள், தங்களது வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்த, சமுதாய நலக்கூடங்கள் உதவியாக உள்ளன. ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 105 சமுதாய நலக்கூடங்களில் பல காவல் நிலையம், சார் - பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பல இடங்களில் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்தும் உள்ளன. அவசியம் உள்ள இடங்களில், சமுதாய நலக்கூடங்களே இல்லாத நிலை தொடர்கிறது. இதனால், ஏழை மக்கள் தனியார் மண்டபங்களில், 50,000 ரூபாய் துவங்கி, பல லட்சம் வரை, அதிக கட்டணம் கொடுத்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய அவல நிலையில் தவிக்கின்றனர். திருப்போரூர் ஒன்றியத்தில் தண்டலம், காயார், கரும்பாக்கம் உள்ளிட்ட 50 ஊராட்சிகள் உள்ளன. பெரும்பான்மையாக, அந்தந்த ஊராட்சிகளில், சமுதாய நலக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில், ஏழை மக்கள் காதணி விழா, நிச்சயதார்த்தம், திருமணம், பிறந்த நாள் விழா, மஞ்சள் நீராட்டு விழா என, பல்வேறு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதிகள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், மக்கள் தொகைக்கு ஏற்ப, சமுதாய நலக்கூடங்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கான சமுதாய நலக்கூடங்களை மாற்று தேவைகளுக்கு பயன்படுத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், காயாரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் காவல் நிலையமும், நாவலுாரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் சார் - பதிவாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன. இதே போல, கண்ணகப்பட்டில் உள்ள சமூக நலக்கூடம், நீதிமன்றமாக மாற்றப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஒன்றியத்தில், 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சமுதாய நலக்கூடங்கள் கட்டப்பட்டன. இதில், பாக்கம் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூட கட்டடத்தில் கடந்த சில மாதங்களாக, உளுந்துார்பேட்டையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு காவல் படை, 10வது பட்டாலியனைச் சேர்ந்த 90 போலீசார், கடந்த ஐந்து மாதங்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த பாக்கம், வயலுார், தாதங்குப்பம், புளிக்கொரடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், சமூக நலக்கூடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இவர்கள் தங்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளை மதுராந்தகம், மேல்மருவத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில், அதிக கட்டணம் கொடுத்து நடத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதே போல, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல சமுதாய நலக்கூடங்கள், முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து வருவதாலும், ஏழை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாற்று பயன்பாட்டில் உள்ள சமுதாய நலக்கூடங்களை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கள ஆய்வு செய்ய வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 105 சமுதாய நலக்கூடங்களில் பல காவல் நிலையம், சார் - பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்தும் உள்ளன. அவசியம் உள்ள இடங்களில், சமுதாய நலக்கூடங்களே இல்லாத நிலை தொடர்கிறது.

வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது தவறு

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சமுதாய நலக்கூடங்களின் தேவை தற்போது அதிகமாக உள்ள நிலையில், மற்ற தேவைகளுக்கு புதிய கட்டடங்களை கட்டாமல், இருக்கும் சமுதாய நலக்கூடங்களை உருமாற்றுவது தவறானது. ஒன்றுக்கு மாற்று மற்றொரு கட்டடம் கிடையாது என்பதை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏழை மக்களின் நிலையை அரசு மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும். சமுதாய நலக்கூடங்களில் குறைந்த கட்டணம் செலுத்தி நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஆனால், தனியார் மண்டபங்களில் அதிக கட்டணம் செலுத்தி தான் நிகழ்ச்சிகள் நடத்த முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் சிந்தித்து, சமுதாய நலக்கூடங்களை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கவும், சிதிலமடைந்துள்ள சமுதாய நலக்கூடங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை