உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் தனியார் நிறுவன வாகனங்களால் அவதி

பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் தனியார் நிறுவன வாகனங்களால் அவதி

வண்டலுார்: வண்டலுாரில், பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் தனியார் நிறுவன வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். வண்டலுாரிலிருந்து வாலாஜாபாத் சாலை தொடங்கும் இடத்தில், தாங்கல் ஏரி பேருந்து நிறுத்தம் உள்ளது. மறு மார்க்கத்தில், இந்த பேருந்து நிறுத்தம் எதிரிலும் பேருந்து நிறுத்தம் உள்ளது. தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கத்திலிருந்து வாலாஜாபாத், காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், இந்த பேருந்து நிறுத்தங்களில் பயணியரை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. இந்நிலையில், இந்த பேருந்து நிறுத்தங்களை ஆக்கிரமித்து, தனியார் நிறுவனங்களின் வாகனங்கள் நீண்ட நேரமாக நிறுத்தப்படுவதால், பயணியர் பேருந்திற்காக, சாலையில் காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக வண்டலுார், 'ஸ்டேட் பேங்க்' அருகிலுள்ள தனியார் நிறுவனத்தின் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள், தாங்கல் ஏரி பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் அரசு பேருந்துகள், இந்த பேருந்து நிறுத்தம் முன்பாக நின்று, பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. மேலும், பேருந்துகள் பிரதான சாலையில் நின்று இறக்கி விடுவதால், பயணியர் விபத்தில் சிக்கும் அபாயம் தொடர்கிறது. எனவே, பயணியருக்கு இடையூறாக, பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தனியார் நிறுவன வாகனங்களை அப்புறப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !