மாமல்லையில் தொடரும் நெரிசல்; நிரந்தர தீர்வு காண்பது எப்போது?
மாமல்லபுரம் : சென்னையை ஒட்டியுள்ள மாமல்லபுரம், முக்கிய சுற்றுலா பகுதியாக விளங்குகிறது. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, குடைவரைகள் ஆகிய பல்லவர் கால கலைச்சின்னங்கள், பயணியரை கவர்கின்றன. அவற்றை காண, இந்திய, சர்வதேச பயணியர் குவிகின்றனர்.குறிப்பாக, சென்னை பகுதியினர், வார இறுதி நாட்களில், ஒரு நாள் பொழுதுபோக்கு சுற்றுலாவாக இங்கு படையெடுக்கின்றனர். அரசு விடுமுறை, பண்டிகை விடுமுறை நாட்களிலும், இப்பயணியரால் சுற்றுலா களைகட்டுகிறது.பெரும்பாலான பயணியர், கார் உள்ளிட்ட தனி வாகனங்களில் வருகின்றனர். ஒரே நாளில் ஏராளமான வாகனங்கள் குவியும் சூழலில், அதற்கேற்ப விசாலமான சாலைகள் இல்லை.இங்குள்ள கிழக்கு ராஜ வீதி, கடற்கரை சாலை, பழைய சிற்பக் கல்லுாரி சாலை, தென்மாடவீதி, ஐந்து ரதங்கள் சாலை, கலங்கரைவிளக்கம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை, பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை ஆகியவை இன்றியமையாதவை.உள்ளூர், சுற்றுலாவாகனங்கள் செல்லும் நிலையில், சாலைகள் அகலம் குறைந்து குறுகியதாக உள்ளன. நிரந்தர கடைகள் சாலை பகுதியை ஆக்கிரமித்துள்ளன. நடைபாதை வியாபாரமும் சாலைகளை ஆக்கிரமித்தே நடக்கிறது.சுற்றுலா களைகட்டும் நாட்களில், வாகனங்கள் எளிதில் கடக்க, எதிரெதிர் திசையில் செல்ல இயலாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், போக்குவரத்து பல மணி நேரம் முடங்குகிறது. மருத்துவ அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை.இது தொடர்பாக அரசு மீது விமர்சனம் எழுந்தது குறித்து, தினமலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, சப் - கலெக்டர் நாராயண சர்மா, இப்பகுதி ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து, அவற்றை அகற்ற உத்தரவிட்டார்.பேரூராட்சி, வருவாய், நெடுஞ்சாலை ஆகிய துறையினர், கடந்த செப்., 18 - 25ம் தேதி வரை, தினசரி ஒரு சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்நடவடிக்கை முழுமையாக இன்றி, அரைகுறையாக மேற்கொள்ளப்பட்டது.அதாவது, சாலையின் முழுமையான அகலப்பகுதியை அளவிட்டு, சாலை பகுதியை முழுதுமாக மீட்டிருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகளோ, கடைகளின் முன் நீண்டிருந்த கூரை தகடை மட்டுமே அகற்றினர்.நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை இடிக்கவில்லை. சாலையோரம் உட்புறம் தள்ளி வைக்கப்பட்ட நடைபாதை கடைகள் மீண்டும் சாலை பகுதிக்கே மாறியுள்ளன.கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாக போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை பகுதியில், விபத்திற்கு வழிவகுக்கும் வகையில் கற்சிலைகள், பாறை கற்கள் குவிக்கப்பட்டிருந்தும், அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.அனைத்து சாலைகளிலும், அதன் முழுமையான அகலப் பரப்பை அளவிட்டு, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். அரசியல் தலையீடுகளால், அதிகாரிகள் அதற்கு தயங்குகின்றனர். போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு காண, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிகாரிகள் களமிறங்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.