உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி; 200 குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ்

ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி; 200 குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ்

மறைமலை நகர், : மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட சாமியார் கேட் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், 30க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர்.இவர்கள், அருகில் உள்ள மறைமலை நகர் ரயில் நிலையம் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள மறைமலை நகர் -- ஆப்பூர் சாலையில் உள்ள ரயில்வே கடவுப்பாதையில், ரயில்வே மேம்பாலம் அமைக்க முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்காக, இந்த பகுதியில் வசித்து வரும், 200க்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்யக்கோரி, அரசு தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.இதை கண்டித்து, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமையாளர்களுக்கான சங்கம் மற்றும் பேரமனுார் கிராம நலச்சங்கம் சார்பில், சாமியார் கேட் அருகில், ஜி.எஸ்.டி., சாலையோரம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இதில் பங்கேற்ற பொது மக்கள் கூறியதாவது:நாங்கள், 40 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். அனைவரும் கூலி தொழில் செய்து வரும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள். இங்கிருந்து அகற்றப்பட்டால் வாழ்வாதாரம் பாதிப்படையும்.இப்பகுதி மக்கள் பாதிப்படையாத வகையில் மேம்பால பணிகளை மேற்கொள்ள வேண்டும். வீடுகள் அகற்றப்பட்டால், இதே பகுதியில் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் அருகில் காலியாக உள்ள இடத்தில், தலா 3 சென்ட் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., - வி.சி., - ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தாம்பரம் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி