உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொழிலாளி கொலை வழக்கில் சகதொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

தொழிலாளி கொலை வழக்கில் சகதொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

செங்கல்பட்டு:தொழிலாளியை கொன்ற வழக்கில், சக தொழிலாளிக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், ஓசூரில், பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். அவரது கடையில் துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் ராஜாசிங், 65. கோயில்ராஜ், 49 ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். கோயில்ராஜ் குடி பழக்கம் உள்ளவர். இதனால் கடைக்கு மதுபோதையில் வருவார். இதை தொடர்ந்து அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, முருசேகன் ஓசூரில் கடையை மூடி விட்டு, சென்னை, கூடுவாஞ்சேரி அடுத்த, ஆதனுாரில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். இங்கு, ஜான் ராஜாசிங், தொடர்ந்து பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கோயில்ராஜ் மீண்டும் வேலையில் சேர்ந்தார். அங்கும் கோயில்ராஜ் தினமும் மது குடித்து விட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். சரியாக வேலை செய்யாமல், ஜான் ராஜாசிங்கை மரியாதை இல்லாமல் பேசி வந்துள்ளார். இதுபற்றி கடை உரிமையாளர் முருகேசனிடம், ஜான் ராஜாசிங் கூறியுள்ளார். இதையடுத்து கோயில்ராஜின் சம்பளக்கணக்கை முடித்து, ஊருக்கு அனுப்பி வைக்குமாறு முருகேசன் கூறியுள்ளார். இந்நிலையில் 2021 ஜன.,30ம் தேதி, ஜான் ராஜாசிங்கின் இருசக்கர வாகனத்தில், கோயில்ராஜ் உடன் பெருங்களத்துார் பேருந்து நிலையம் சென்றனர். அப்போது, பீர்க்கன்கரணை ஏரிக்கரை பகுதியில் இருவரும் மது அருந்தினர். அப்போது இருவருக்கும் கடை தொடர்பான வாக்குவாதத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோயில்ராஜ், ஜான் ராஜாசிங்கை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து, பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோயில்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் நடந்த வழக்கு விசாரணையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கோயில்ராஜ்க்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !