சாலைகளில் உலவும் மாடுகள் கூடுவாஞ்சேரியில் இடையூறு
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, அருள் நகரில், சாலைகளில் மாடுகள் அணிவகுத்து செல்கின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் சிரமம் அடைகின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கூடுவாஞ்சேரி, அருள் நகர் 40 அடி சாலை, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், மாடம்பாக்கம், ஆதனுார் பகுதிகளுக்கும் செல்ல, முக்கிய சாலையாக உள்ளது.இந்த சாலையை ஒட்டியவாறு தனியார் பள்ளிகள் இருப்பதால், பள்ளி செல்லும் மாணவர்களும், பெற்றோர்களும் அதிக அளவில் இந்த சாலையை காலை, மாலை நேரங்களில் பயன்படுத்துகின்றனர்.இந்த சாலையில், தொடர்ந்து மாடுகள் உலா வருவதால், அப்பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, எந்நேரமும் அவை சாலையில் படுத்து ஆக்கிரமித்துள்ளன.இது, அவ்வழியாக செல்லும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு, இருசக்கர வாகனங்களில் செல்வோர், சிறு சிறு விபத்துகளில் சிக்குகின்றனர்.எனவே, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, கோசாலைகளில் ஒப்படைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அவற்றின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.