உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் மாடுகள் உலா ஊரப்பாக்கத்தில் பீதி

சாலையில் மாடுகள் உலா ஊரப்பாக்கத்தில் பீதி

ஊரப்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள, 15 வார்டுகளில், 80,000க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இங்கு விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களே பிரதானமாக இருந்தன. இதனால், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். நகரமயமாக்கல் விளைவாக விவசாய நிலங்கள், ரியல் எஸ்டேட் தொழில் வாயிலாக விற்கப்பட்ட நிலையில், பல குடும்பத்தார் வேறு தொழிலுக்கு மாறினர். ஆனாலும் தற்போதும் கூட, 30க்கும் மேற்பட்ட குடும்பத்தார் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு, பால் வியாபாரத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். மாடுகளுக்கு உரிய மேய்ச்சல் நிலம் இல்லாததால், பால் கறக்காத மாடுகளுக்கு தீவன செலவு ஏற்படுகிறது. இதனால், மாடுகளை முறையாக தொழுவத்தில் அடைத்து வைக்காமல், இஷ்டம் போல் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இந்த மாடுகள், சாலையோரங்களில் குவிந்துள்ள குப்பை கழிவுகளில், தங்களுக்கான உணவை சாப்பிட்டு பசியாறுகின்றன. இப்படி மாடுகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்களும் விபத்து அச்சத்துடன் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள குடும்பத்தார், அவற்றை சாலைகளில் விடுகின்றனர். குப்பை கழிவுகளில் மாடுகள் மேயும் போது, ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு, சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது மோதுவதும், இதனால் அவர்கள் காயமடைவதும் தற்போது அதிகரித்துள்ளது. மாடுகள், வாகன ஓட்டிகளை முட்டித் தள்ளுவதும்அதிகரித்துள்ளது. எனவே, மாடுகளை வெளியே திரிய விடும் உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், அதிக அளவில் அபராதமும் விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !