உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அடர்ந்த சீமைகருவேல மரங்களால் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்

அடர்ந்த சீமைகருவேல மரங்களால் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்

மறைமலை நகர்,:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் அமைக்கப்பட்டு உள்ள வீட்டுமனை பிரிவுகளில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுவதால் இவை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் காட்டாங்கொளத்துார் ஒன்றியம், 193.90 ச.கி.மீ., பரப்பளவில் 39 ஊராட்சிகளை அடக்கி உள்ளன.நகரமயமாக்கல் காரணமாக இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலுார், ஊரப்பாக்கம், சிங்கபெருமாள் கோவில், வீராபுரம், திம்மாவரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் குடியிருப்புகள், வீட்டு மனைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் இந்த ஊராட்சிகளில் மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றன.பெரு நிறுவனங்கள் இடம் கிடைக்கும் போதே வாங்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு கிராமத்திலும் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் காலி நிலங்களை வாங்கி வைத்து உள்ளன. இந்த நிலங்களில் தற்போது சீமைகருவேலமரங்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன.இந்த பகுதியில் கஞ்சா விற்பனை, ரவுடிகள் பதுங்கல், உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:ஒரகடம், மறைமலை நகர், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலை துவக்கம் காரணமாக வீட்டுமனைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டது. அந்த நிலங்களில் தற்போது அதிகளவில் சீமைகருவேல மரங்கள் காடு போல வளர்ந்து காணப்படுகின்றன.இதனால் விஷ ஜந்துக்களின் அச்சம் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.கிராமத்திற்க்கு தொடர்பு இல்லாத நபர்கள் இந்த பகுதிகளில் சுற்றி திரிகின்றனர். இதனால் கஞ்சா விற்பனை, மொபைல் போன் பறிப்பு, பைக் திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவை கிராமங்களில் அதிகரித்து வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சீமைகருவேல மரங்களை வெட்டி அகற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !