மாமல்லபுரம் ஏ.டி.எம்.,களில் பணமின்றி வாடிக்கையாளர்கள் அவதி
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண, உள்நாடு மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் இருந்து, பயணியர் சுற்றுலா வருகின்றனர். குறிப்பாக சென்னை, சுற்றுப்புற பகுதியினர் வார இறுதி, அரசு விடுமுறை ஆகிய நாட்களில், இங்கு குவிகின்றனர். சர்வதேச பயணியர் சுற்றுலாவும், தற்போது களைகட்டுகிறது.இந்தியர், சர்வதேச பயணியர், அவசர பண தேவைக்கு, இங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பிற தனியார் வங்கிகள் ஆகியவற்றின் ஏ.டி.எம்.,களில், பணம் எடுக்கச் செல்கின்றனர்.ஆனால், பெரும்பாலான நேரங்களில் பணம் கிடைக்காததால் அவதிப்படுகின்றனர்.இங்குள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. மற்ற ஏ.டி.எம்.,களிலும் அடிக்கடி பணமில்லாமல் போவதால், வாடிக்கையாளர்கள் மற்றும் பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இப்பகுதியின் சுற்றுலா முக்கியத்துவம் கருதி வங்கி நிர்வாகங்கள், ஏ.டி.எம்.,களை முறையாக செயல்படுத்தவும், தட்டுப்பாடு இல்லாமல் பணம் நிரப்பவும் வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.