உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லையில் நாட்டிய விழா தொல்லியல் துறை அனுமதி

மாமல்லையில் நாட்டிய விழா தொல்லியல் துறை அனுமதி

மாமல்லபுரம்:மாமல்லபுரம் தொல்லியல் வளாக பகுதியில், இந்திய நாட்டிய விழா நடத்த, தொல்லியல் துறை அனுமதித்துள்ளது.மாமல்லபுரத்தில், பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. இந்தியர் ஆண்டு முழுதும் வருவது ஒருபுறமிருக்க, சர்வதேச பயணியர் அக்., - மார்ச் வரை, அதிக அளவில் குவிகின்றனர்.இக்காலத்தில், சர்வதேச பயணியர் சுற்றுலா களைகட்டும் சூழலில், நம் நாட்டின் கலை, கலாசாரம், பாரம்பரிய விழாக்கள் உள்ளிட்டவற்றை அறியவும் விரும்புகின்றனர். இதையடுத்து, தமிழக சுற்றுலாத்துறை, அவர்களுக்காக ஆண்டுதோறும் டிச., - ஜனவரில், மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவை, ஒரு மாதத்திற்கு நடத்துகிறது.விழாவில், தினசரி மாலை பரதம், குச்சிப்புடி, கதகளி, ஒடிசி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நாட்டியங்கள், கரகம், காவடி உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளும் நிகழ்த்தப்படும்.இவ்விழாவை வரும் 22ம் தேதி துவக்கி, ஜன., 20ம் தேதி வரை நடத்த, சுற்றுலாத் துறை முடிவெடுத்துள்ளது. இங்குள்ள கடற்கரை கோவில் பகுதி புல்வெளியில் விழா நடத்தப்படும். இந்த புல்வெளியை, தொல்லியல் துறை அமைத்து பராமரித்து வருகிறது. இதனால், விழா நடத்த தொல்லியல் துறையினரிடம், சுற்றுலா துறையினர் அனுமதிக்க கோரினர். இந்நிலையில், இதற்கான அனுமதி வழங்கியுள்ளதாக, தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து, தொல்லியல் துறையினர் கூறியதாவது:கடற்கரை கோவில் அருகில் நாட்டிய விழா நடத்த, சுற்றுலா துறையினர் வழக்கம் போல் அனுமதி கேட்டதால், அனுமதி வழங்கியுள்ளோம். ஆனால், பழைய புல்வெளியை அகற்றி, தற்போது தான் புதிதாக புற்கள் நட்டுள்ளோம். இங்கு நாட்டிய விழா நடத்தினால் பயணியர், பொதுமக்கள் நடந்து, புதிய புற்கள் அழியும். எனவே, விழாவிற்குப் பின் சுற்றுலா துறையே, அதன் செலவில் புதிதாக புற்கள் நட அறிவுறுத்தி உள்ளோம். அல்லது அர்ஜுனன் தபசு உள்ளிட்ட வேறிடத்தில் விழா நடத்தவும் ஆலோசனை தெரிவித்து உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை