உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எச்சரிக்கை பலகையின்றி நடைபெறும் நடைமேம்பால பணியால் அபாயம்

எச்சரிக்கை பலகையின்றி நடைபெறும் நடைமேம்பால பணியால் அபாயம்

மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை,- அனுமந்தபுரம் சாலை சந்திப்பு அருகில், எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர்.திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் பெருங்களத்துார் -‍- செட்டிபுண்ணியம் வரை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.இந்த நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்டபகுதியில் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையைக் கடக்கும் பாதசாரிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.இந்த பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சார்பில், சிங்கப்பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலை சந்திப்பு அருகில், சாலையின் குறுக்கே நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் சமீபத்தில் துவங்கப்பட்டு, சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.இந்த பள்ளத்தை சுற்றி, சிமென்ட் கான்கிரீட் தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன.ஆனால், பணிகள் நடைபெறுவதற்கான அறிவிப்பு பலகை மற்றும் இரவில் ஒளிரும் பட்டைகள் உள்ளிட்டவை இந்த பகுதியில் அமைக்கப்படவில்லை.இதன் காரணமாக, இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் வேகமாக வரும் புதிய வாகனங்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன.இங்கு முறையாக அணுகு சாலை இல்லாததால், எதிர் திசையில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.அத்துடன், நடைமேம்பால பணிகள் நடைபெற்று வரும் பகுதி எந்தவொரு எச்சரிக்கை பலகை, இரவில் ஒளிரும் பட்டைகள் இல்லாமல் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !