செம்பாக்கம் அம்மா உணவகத்தில் விற்பனை சரிவு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம், காமராஜபுரம் பேருந்து நிலையத்தை ஒட்டி, அம்மா உணவகம் இயங்கி வருகிறது.இங்கு, 12 பெண் ஊழியர்கள், இரண்டு 'ஷிப்ட்'டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இங்கு விற்பனை குறைந்து, நாள்தோறும், 400 - 450 இட்லி, 150 சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் மட்டுமே விற்பனை ஆகிறது. இந்நிலையில், ஊழியர்களுக்கு, மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.இதுகுறித்த புகாரையடுத்து, இரண்டு மாதங்களுக்கு முன், தாம்பரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா, உணவகத்தில் நேரில் ஆய்வு செய்து, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.இது குறித்து, மண்டல அதிகாரிகள் கூறியதாவது:அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அரிசி உள்ளிட்ட பொருட்களை முறையாக பராமரிப்பதில்லை. ஆண் ஊழியர்களை, அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் தரக்குறைவாக பேசுகின்றனர்.அவர்களுக்குள்ளேயே பிரச்னை நிலவுகிறது.இது தொடர்பாக, மாநகராட்சி சார்பில், 'மெமோ'வழங்கப்பட்டது. அதற்கு, அவர்கள் பதில் வழங்கவில்லை. நோட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இருப்பு, நேரில் ஆய்வு செய்யும் போது சரியாக இல்லை. பொருட்கள் இருப்பு மாறுபடுவதால், ஊதியத்தில் பிடித்தம் செய்து, மீதியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒரு நாளைக்கு, 1,200 இட்லி விற்பனையாக வேண்டிய இடத்தில், 400 இட்லி மட்டுமே விற்பனையாகிறது. அதற்கு, 12 பேர் தேவையில்லை. அதனால், ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.